பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Wednesday, August 27, 2014

தினத்தந்தி வெளியீடு : ஆயிரம் ஆண்டு அதிசயம். - அமுதன்





ஓரிருமுறை தஞ்சைப் பெரியகோவிலுக்குச் சென்றிருக்கின்றேன். ஆனால், இம்முறை சென்றவாரம் சென்றிருந்தபோது அரியதோர் வழிகாட்டுநர் கிடைத்தார்.  அவர்தான் வெளிக்கரு என்ற நூலின் ஆசிரியர், தென்னன் மெய்ம்மன். மகாபலிபுரம் சிற்பக்கல்லூரியில் பயின்று தங்கப்பதக்கம் பெற்றுத் தேர்ச்சி பெற்றவர்.. ஸ்தபதி என்ற சொல்லுக்கு பெருந்தச்சன் என்பதே சரியான தமிழ்ச் சொல் என்று எடுத்துரைப்பவர். 

ஆண்டுக்கு நாட்கள் 360. மாதந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் அமாவாசையும், வெள்ளிக்கிழமைகளில் பெளர்ணமியும் வரும் திராவிட ஆண்டுப்பிறப்பு, ஆரியர் ஆண்டுப்பிறப்பு, திருவள்ளுவர் ஆண்டுப்பிறப்பு என்றிருப்பதுபோல் தமிழனின் மெய்யான புத்தாண்டு தினம் ஆண்டுதோறும் தைமாதம் 1 தேதிதான் வரும். அஃது ஜனவரி 4 அல்லது 5 தேதியாகவே  இருக்கக்கூடும். நீங்கள் தமிழரென்றால் இந்த நாட்காட்டியைப் பின்பற்றுங்கள்; இல்லையென்றால் புறக்கணியுங்கள் என முழக்கமிட்டு வருபவர்,  தென்னன்  மெய்ம்மன். 

சென்ற ஆண்டு தமிழர்தம் நாட்காட்டி புலவர் இளங்குமரனார் தலைமையில் வெளியிடப்பட்டுவிட்டது. ஓரிரு தினங்களுக்குமுன் ஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்தில் . மூதறிஞர்  செல்லப்பனாரின் நேரடி வாரிசுகள் 500-க்கும் மேற்பட்ட தமிழ் நாட்காட்டிளை வெளியிட்டு இலவசமாக வழங்கினர். ஆர்வலர் அணுக வேண்டிய மின்னஞ்சல் முகவரி : thennanmeimman@gmail.com

பூகம்பம் / நில நடுக்கம் / சூறாவளி /சுனாமிகள் ஏற்பட்டால் கூட, கோவிலுக்கு எத்தகைய ஆபத்தும் ஏற்பட்டாவண்ணம்  எழுப்பபட்டுள்ளது தஞ்சைப் பெர்யகோவில். அத்தகைய சிறந்த தொழில்நுட்பத்துடன் அமைக்கப் பெற்றது. பெரும்பாறையை அரைவட்டவடிவில் குடைந்து,அதில் மணலைக்கொட்டிப் பரப்பியபின், மணல்பரப்பின் மீது எழுப்பப்பட்ட கோவில் அது. அதனால்தான் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தபின்னும் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது.

இந்த இடத்தில் ஒரு உண்மையைத் தெரிவிக்கவேண்டும். கோவையில் செம்மொழி மாநாட்டினை நடத்திய கையோடு, தொடர்ந்து இராஜராஜனது ஆயிரமாவது ஆண்டு விழா தஞ்சையில் நிகழ்த்தப்பெற்றது நாடறிந்ததொரு செயல். அதே நேரத்தில் பெரியகோவிலின் உட்பிரகாரத்தில், தற்போது அமைக்கப்பட்டிருக்கும் வராஹி அம்மன் கோவிலுக்கருகில் ( நடுவரசின் தொல்பொருள் துறையின் நிர்வாகத்தில் எப்படி இதற்கு அனுமதி வழங்கப்பட்டது என்பது யாருக்கும் புரியாத புதிர் ) 9 அங்குல விட்டமுள்ள ஆழ்துளைக் குழாய்க்கிணறு தோண்டும் நாசவேலையும் நடந்தது. தோண்டும்பொழுது தண்ணீருக்குப் பதில் மணல்தான் வந்தது. தோண்டும் முயற்சிகளும் பொதுமக்களுக்குத் தெரியாது. அந்த ஆழ்குழாய்க் கிணறு இயக்கப்பட்டிருந்தால் பெருங்கேடு கோவிலுக்கு நேர்ந்திருக்கும். இதன் விபரீதத்தை உணர்ந்த நல்லோர் முயற்சியில்  மதுரை உயர்நீதிமன்றக்கிளை மூலம் தடை உத்தரவு வாங்கி குழாய்க்கிணறு தோண்டும் முயற்சி முறியடிக்கப்பட்ட உண்மை பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் அவர்களது விளக்கத்தாலேயே அறிந்துகொள்ள முடிந்தது. இதன் தொடர்ச்சியாக அந்தக் குழாய்க் கிணறு மூடப்பட்டிருக்க வேண்டும் அந்தச் செயல் நடக்கவில்லை. புதைக்கப்பட்ட குழாய் அப்படியேதான் உள்ளது. இரும்புத்தகடு  கொண்டு  நான்கு போல்ட்  ஆணிகள் மட்டும்  முறுக்கப்பட்டுள்ளன. .சமூக விரோதிகளால்  தவறாகப் பயன்படுத்தப்பட்டால் விளைவு என்ன ஆகும் என்பதும் கேள்விக்கும் ஆய்வுக்கும் உரியதொன்றாகும். இத்தகவல் நேரில் பார்த்தும் கேட்டும் அறிந்தது.


 (ஆழ்குழாய்க் கிணறு  தோண்டும்போது எடுக்கப்பட்ட மணற் படுகை

இன்னும் குழாய்  மூடப்படவில்லை;  ஆபத்து அகலவில்லை )



25 -க்கும் மேற்பட்ட அமைப்புக்களின்  கூட்டுப்பொறுப்பில் உள்ள தஞ்சைப் பெரிய கோவில் பாதுகாக்கப்பட வேண்டுமானால், அந்த குழாய்க் கிணறு முற்றிலுமாக மணல் கொண்டு நிரப்பப்படவும் வேண்டும். பூமிக்குள் புதையுண்டு கிடக்கும் குழாயும் அகற்றப்பட்டாகவேண்டும். மாநில மத்திய அரசுகள் ஆவன செய்யுமா? 

செம்மொழி மாநாடு, இராஜராஜன் ஆயிரமாவது ஆண்டுவிழா ஆகியவற்றின் சூத்திரதாரி அப்போதைய முதல்வர் டாக்டர் கலைஞர் என்பது ஊரறிந்த உண்மை. அப்போதைய தமிழகமுதல்வரின் விபரீத முயற்சியை நீதிமன்றத்தின் மூலமாகவே முறியடித்த தஞ்சைப் பெரியகோவில் மீட்புக் குழுவினரை  எவ்வளவு பாராட்டினாலும் தகும். ,

இனிமேல் தினத்தந்தி ஆசிரியர் அமுதன் எழுதி வெளிவந்துள்ள  ”ஆயிரம் ஆண்டு அதிசயம்“ நூலுக்குச் செல்வோம். 

இந்நூல் தமிழ் மக்களுக்குக் கிடைத்துள்ள ஓர் பொக்கிஷம்.  பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் தமிழ் பரப்பிடும் தினத்தந்தியின் தமிழ்த்தொண்டிற்கேற்ப,, அதன் வெளியீடாக வந்துள்ள இந்நூல் பாமரருக்கு எளிதில் விளங்கத்தக்க தமிழிலக்கியப் பரிசு என்றே கொள்ளவேண்டும். படிக்க ஆரம்பித்தால் படித்து முடித்த பின்னர்தான் நூலைக் கீழே வைக்க முடியும். ஒரு ஆய்வு நூலிற்குரிய அத்தனை இலக்கணங்களையும் கொண்டிலங்கும் இந்த நூல் தினத்தந்தி ஞாயிறு மலரில் தொடராக வந்தபோதே பலரது பாராட்டையும் பெற்றது. புத்தகமானபின் கேட்கவா வேண்டும்.? 

தினத்தந்தியில் ஆசிரியராக 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்துவரும் அனுபவம் நூலாசிரியர் அமுதன் அவர்களுக்குப் பெரிதும் உதவியுள்ளது. தஞ்சைப் பெரிய கோவிலுக்கும், இராஜராஜன் வாழ்ந்த பகுதிகளுக்கும் நேரில் சென்று களப்பணி ஆற்றியதாலேயே அவருக்கு இது சாத்தியமாகி உள்ள்து. பல்வேறு தொல்பொருள் ஆய்வாளர்களைச் சந்தித்து தகவல்களைச் சேகரிதுள்ளார். பல்வேறு ஆதாரங்களையும் திரட்டி வைத்துக்கொண்டே களத்திலிறங்கி வெற்றிபெற்றுள்ளார். 

ஏனெனில், இக்கோவிலில் ஒன்றரை லட்சம் தமிழ்க் கல்வெட்டுக்கள் உள்ளன. மேலும், இவற்றைப் படித்துத் தெரிந்து கொள்ள தமிழார்வமும் முயற்சியும் இருந்தால் மட்டும் போதுமானது. கல்வெட்டு எழுத்துக்கள் இன்றையத் தமிழ் எழுத்துக்களுடன் பெரும்பாலும் ஒத்துப்போகின்றன. இந்த உண்மையும் நூலில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.  உட்பிரகாரத்தில் உள்ள பிள்ளையாருக்கு வாழைப்பழம் பெற்றிட, பழவியாபாரிகளுக்கு கொடுக்கப்பட்ட சல்லிக்காசுகள் விபரங்களும், அதற்கீடாக அவர்கள் தினந்தோறும் தரவேண்டிய வாழைப்பழங்களின் எண்ணிக்கையும் கல்வெட்டில் உள்ளன. அனைவரது வணிகர்களின் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளன. ,ஆனால், அந்த எழுத்துக்கள் முறையான பராமரிப்பின்றி அழிந்துகொண்டிருக்கின்றன என்பது வருத்தம்தரும் செய்தியாகும்.

திருக்கோவில்கட்டும் பணியில் ஈடுபட்டவர்கள் பெயர்கள் அனைத்தும் கல்வெட்டில் உள்ளன. அந்தக்காலத்தில் ஓரிரு நடன மங்கையரே கோவில்தோறும் இருப்பர். ஆனால் தஞ்சைப் பெரியகோவிலில் 400  பெண்கள் நாட்டியமாடும் பணியில் இருந்த உண்மை வியப்பைத் தருகின்றது. அதுவும் ஏழாண்டுப் பயிற்சிக்குப் பின்னரே அவர்கள் தேர்ந்தெடுக்கபட்டுள்ளனர். நடனப் பெண்களுக்கு 5 வயதிலேயே பயிற்சி தொடங்கி விடுகின்றது.  இவர்களொடு 132 இசைக்கலைஞர்களும் உடன்பணியாறினர் என்பதும் தெரியவருகின்றது.அவர்களூக்குத் தனித்தனியான வீடுகளும், இதரவசதிகளும் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ள சிறப்பினையும் நூல் எடுத்துக்கூறுகின்றது. 

இந்நூலின் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால் உண்மைகளை ஆதாரபூர்வமாகத் தருகின்றது. கோவில் குறித்து நிலவும் தவறான கருத்துக்களையும் எடுத்துக்கூறி அவற்றைத் தவறு என்றும் சுட்டிக்காட்டி விளக்குகின்றது. 

ஆந்திர மாநிலம், இராஜமுந்திரி என்கிற இராஜமகேந்திரபுரத்தில், கோதாவரி நதி தீரத்தில், தவளேஸ்வரம் என்னுமிடத்தில் அணைகட்ட முற்பட்டார் ஆங்கிலக் கவர்னர், வில்லியம் ஆர்தர் காட்டன். அவர்  காவிரியில் கரிகால் சோழரால் கட்டப்பட்ட கல்லணையின் அஸ்திவாரத்தைத் தோண்டிப்பார்த்துத் நுணுக்கங்களைத் தெரிந்துகொண்டார் என்பது வரலாற்றுச் செய்தி. 

நீரோட்டமுள்ள ஆற்றில் நின்று குளிக்கும்பொழுது நீருக்குள் உள்ள பாதங்கள் ஒரு சற்றுநேரத்திற்குப்பின் மணலுள் புதைந்து நிலையாக நின்றுகொள்ளும்., இந்த நுணுக்கத்தின்படியே கல்லணை கட்டப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியே ஆந்திரத்தின் அணையும் ஆகும். இந்த உண்மையை,  சென்னை பாவாணர் நூலக வளாகத்தில் நிகழ்ந்த, நீர் மேலாண்மை வல்லுநர், பழ. கோமதிநாயகம் நினைவுக்கூட்டத்தில் வை.கோ.அவர்கள் எடுத்துரைத்தார். அத்தகவலையும் இந்நூல் உறுதி செய்கின்றது. 

தமிழிசைப் பாடல்கள் சிலவற்றைத் திருக்கோவில் தரிசனத்தின்போது கேட்டு மயங்கிய இராஜராஜனின் தமிழ்ப்பற்றின் தொடர்ச்சி பாடல்களைப்பற்றிய வினாக்களை எழுப்புகின்றன. தேவாரப் பாடல்கள் என்று கேட்டறிந்த மன்னனின் தேடல் வேட்டை தொடர்கின்றது. திருநாரையூரில் வசித்த சைவத் துறவி நம்பியாண்டார் நம்பியின் சந்திப்பு நிகழ்கிறது. அவர் பொல்லாப் பிள்ளையாரை வழிபடும் தீவிர பக்தர். அவரது அருட்திறத்தால் தேவார ஏடுகள் தில்லையம்பலத்தில் இருப்பது தெரியவர அவற்ற்றுள் கரையான்களால் அழிக்கப்படாத ஓலச்சுவடிகளை மீட்டெடுக்கும் மன்னரின் முயற்சிகளைச் சுவைபட எழுதியுள்ளார், கிடைக்கபெற்ற பாடல்களை வகைப்படுத்திய முறைமைமையும் விளக்கப்பட்டுள்ளது. அப்பாடல்களை அவற்றிற்கே உரிய இராகங்களில் பாடச்செய்ய மேற்கொண்ட முயற்சிகளும், அவை வாழையடி வாழையாக சமூகத்தில் அழியாமல் தொடர்ந்திட மன்னன் வகுத்தளித்த செயல்திட்டமும் வியப்பை ஏற்படுத்துகிறது.  சைவநெறி நின்றொழுகும் சிவபக்தர்களின் நம்பிக்கைக் கருத்துக்களுக்கு வலுவூட்டும் வண்ணம் இப்பகுதி அமைந்துள்ளது.

 ”சாவா -மூவா -பேராடு”  என்றதொரு திட்டம் நடைமுறைப்பட்டது, இராஜராஜன் காலத்தில். இதற்கு மரித்தலும் மூப்புமில்லாத ஆடுகள் என்பது பொருள். 

செல்வச் செழிப்புள்ள ஒரு பெண், பெரியகோவிலில் ஆண்டு முழுவதும் நெய்விளக்கு ஏற்றிடச்செய்ய விரும்பி அளித்த நன்கொடையால் உருவானதே இந்தத் திட்டம். வாழ வழியற்ற ஏழையிடம் நாளொன்றுக்கு ஆழாக்கு நெய் கோவிலுக்குத் தரவேண்டும். உன் வாழ்க்கைக்கும் வழிபார்த்துக் கொள்ள வேண்டும். என்ன எதிர்பார்க்கிறாய்? என்று வினவுகின்றனர். 96 பெண் ஆடுகளும், கிடாய் மற்றும் குட்டி ஆடுகளும் இருந்தால் நானும் வாழ்வேன். கோவிலுக்கு நாள்தோறும் ஆழாக்கு நெய்யும் தரமுடியும் என்ற பதிலும் கிடைக்கிறது. அந்த ஏழையின் விருப்பம்  நிபந்தனையுடன் நிறைவேற்றப்படுகின்றது என்ன நிபந்தனை ? உனது கணக்கில் இந்த ஆடுகள் பற்றிய விவரம் நிலுவையில் இருக்கும். எத்தனை ஆண்டுகளுக்குப்பின் கேட்டாலும்,  இப்போது கொடுக்கப்படும் ஆடுகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் வயது என்ன இருக்கிறதோ அதே போன்ற ஆடுகளைக் கோவிலுக்குத் திரும்ப ஒப்படைக்கவேண்டும் என்பதேயாகும். காலப்போக்கில் ஆடுகள் பல்கிப் பெருகுகின்றன. நாள்தோறும் ஆழாக்கு நெய்யும் கிடைத்து விடுகின்றது. கோவிலில் விளக்கும் எரிகின்றது. உரிய நிலையான முன்னேறத்தை அடந்து விடுகின்றான் அந்த ஏழை. அப்போது தனக்கு வழங்கப்பட்ட அதே அளவிலான, அதே வயதுடைய ஆடுகளையும் கோவிலுக்குத் திருப்பியளித்தும் விடுகின்றான். அதாவது, ஏழைக்கு வழங்கப்பட்ட ஆடுகள் அதே எண்னிக்கையில் மரணம் அடையாமலும், , மூப்பு அடையாமலும், மீண்டும் கோவிலுக்குக் கிடைத்துவிட்டன. இதே போன்று பசுக்களும் வழங்கப்பட்டன என்ற தகவலையும் தருகின்றார், நூலாசிரியர்.

அந்தக்காலதில் கோவில்கள் வங்கிகளைப்போன்று செயல்பட்டு வந்தன என்பர் அறிஞர் பெருமக்கள்.  ஆம்.  வசதிகளற்ற வறுமையிலுள்ளோருக்கு கோவில்கள் உதவி செய்தன. வசதிவந்தபின் உதவியைப் பெற்றோர் நன்றி உணர்வுடனும் ஏமாற்றாமலும் பன்மடங்கில் திருப்பியும் கோவில்களுக்குத் திருப்பிச் செலுத்தினர். கோவில் சொத்துக்கள் பன்மடங்காயின. இவ்வுண்மையையும் இந்நூல் உறுதிப்படுத்துகின்றது.. 

அபூர்வமான செப்புச் சிலைகளும் சோழர்கள் காலத்தில் செய்யப்பட்டன. அவற்றில் பல சிலை வேட்டைக்காரர்களிடம் சிக்கிவிட்டன. கடந்த நூற்றாண்டின் முற்பகுதிவரை தஞ்சைக்கோவிலில் பத்திரமாக இருந்த இரு சிலைகள் திடீரென்று மாயமாகிவிட்டன.  சில ஆண்டுகளுக்குப்பின் மாயமான அந்த இரு சிலைகளும் குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள தனியாருக்குச் சொந்தமான கவுதம் சாராபாய் கலைக்கூடத்தில் இருப்பது தெரிய வந்தது. மீட்க மேற்கொண்ட முயற்சிகள் இன்றளவும் வெற்றிபெறவில்லை., இருப்பினும் விரைவில் நல்லது நடக்கும் என்ற தமது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றார், நூலாசிரியர், அமுதன்.

138 தலைப்புக்களில் பல்வேறு அரிய தகவல்களுடன் வெளிவந்துள்ள இந்நூல் அளவிறந்த அபூர்வத் தகவல்களை ஆதாரங்களுடன் எடுத்துரைக்கும் ஓர் ஆவணமாகும். அனைத்தையும் ஒருங்கே எடுத்துரைத்தல் இயலாது. எனவே, சிற்சில தகவல்கள் மட்டும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.

”நனி சிறந்த  தமிழ் நாளேடு தினத்தந்தி. அதன் ஆசிரியர் திருமிகு. அமுதன். அவரால் படைக்கப்பட்ட ஆயிரம் ஆண்டு அதிசயம் தமிழ்மக்களுக்குக் கிடைத்த பரிசு.” என்று  முனைவர். தஞ்சாவூர் குடவாயில் சுப்பிரமணியன், அணிந்துரையில் முன்மொழிகின்றார். “ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியர்போல் கற்றுக் கற்பித்திருக்கிருக்கிறீர்கள். அரிய தொடர், பெரியபணி. தமிழ்ச்சமுதாயத்துக்கு தினத்தந்தியின் குறிப்பிடத்தக்க தொண்டுகளில் ஒன்று என்று தங்கள் ஆயிரம் ஆண்டு அதிசியத்தைச் சொல்வேன்” என்று வழிமொழிகின்றார், கவிஞர் வைரமுத்து.  

நூலின் அருமை குறித்து இதைவிடச் சிறப்பாக எப்படிச் சொல்லிவிட முடியும் ? 

தமிழினத்தின் பண்பாட்டு அடையாளங்களைச் சுட்டிக்காட்டும் பணியினை தினத்தந்தி வெளியீடுகள் சிறப்பாகச் செய்து வருகின்றன.  அவை தினத்தந்தி நாளிதழ் போன்றே பாமரரும் புரிந்துகொள்ளும் வகையில் எளியநடையிலும் உள்ளன. ஆங்காங்கே அதிசயங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன என்பார், தமிழ்மக்கள் நெஞ்சில் வாழும் படைப்பாளி வல்லிக்கண்ணன். அத்தகைய அதிசயங்களாகத்தான் இந்நூல்களையும் எடுத்துக்கொளள வேண்டும்.

வரலாற்றுச் சுவடுகள், 

இலங்கைத் தமிழர் வரலாறு, 

ஆயிரம் ஆண்டு அதிசயம் 

என்ற மூன்று வெளியீடுகளும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டோர் மற்றும் தமிழறிந்தோர் வீடுகள்தோறும் தவறாமல் இருக்கவேண்டிய  ”தமிழ் வேதங்கள்” என்றால் அது மிகையன்று. 

கிடைக்குமிடம் :

தந்தி பதிப்பகம், 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி -சென்னை-7

முதற் பதிப்பு : மார்ச் 2014

இரண்டாம் பதிப்பு : ஜூலை 2014

விலை ரூ. 150/-

பக்கங்கள் 236  ( XII + 224 )

www..dailythanthi.com

mgrthanthipub@dt.co.in

தொலைபேசி எண் : 044 -2661 8661 

-சங்கர இராமசாமி-

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment