பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Tuesday, September 9, 2014

வல்லினம் மிகுதலும் மிகாமையும் - திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார் பகுதி V



25. தமிழா சிலிர்த்தெழு !

தமிழா என்பது போல ஒருவரை நாம் அழைக்கும் நிலையில் அவர் பெயரைக் குறிப்பிடுவது விளித்தல் எனப்படும்.

( விளித்தல் - அழைத்தல் ) இது எட்டாம் வேற்றுமை.


விளியேற்ற பெயர் ‘தமிழன்’ என்பதுபோல இயல்பாகவும் இருக்கலாம். அல்லது தமிழ, தமிழா, தமிழனே, தமிழாவோ என்றவாறு மாற்றங்களைப் பெர்ரும் வரலாம்.

இவ்வாறு விளியேற்ற பெயர்களின் பின் வல்லெழுத்து மிகாது.

எடுத்துக்காட்டு.

வளவ கேள் !

தம்பீ போ !

அம்மா சொல் !

குழந்தாய் பார் !

பெரியீர் செல்க !

இளங்கோ படி !

குயிலி பாடு !

தங்காய் கொடு !

வழுதி காட்டு !

இளைஞரீர் காண்மீன் !


26. அக்கரை

‘அ’ என்பது தொலைவில் இருப்பதைக் குறிக்குஞ் சுட்டெழுத்து. அது ‘அந்த’ என்று வளர்ந்தும் நிற்கிறது. அவ்வாறே ‘இ’ என்னும் அண்மைச் சுட்டும் ‘இந்த’ என்று நீண்டுள்ளது.

‘உ’ என்னும் சுட்டெழுத்து நூல் வழக்கிலேயே காணக் கிடக்கிறது. ( ஈழத்தில் பேச்சு வழக்கிலும் உண்டு )

அங்கு, இங்கு, ஆங்கு, ஈங்கு, ஆண்டு, ஈண்டு என்பன சுட்டுப் பெயர்களாகும். அப்படி, இப்படி என்பனவும், அவ்வகை, அத்துணை, இத்துணை என்பனவும் சுட்டுப் பெயர்களாக வழங்கி வருகின்றன.

அக்கரை என்பதில் கரை என்னும் வருமொழியை நோக்கி ‘அ’ என்னும் சுட்டெழுத்தின் முன் வல்லெழுத்து ( க் ) மிகுந்துள்ளது.

சுட்டெழுதுகள், சுட்டுப் பெயர்களின் முன் வல்லெழுத்து மிகும்.

எடுத்துக்காட்டு :- 

இக்காலம்

உப்பக்கம்

இந்தப் பையன்

அங்குக் கண்டேன்

இங்குச் சென்றார்

ஆங்குத் தெரியும்

இத்துணைச் சிறப்பு

ஈண்டுக் காட்டுதும்

அப்படிக் கூறினார்

இப்படிச் சொல்லலாமா ?

அவ்வகைப் பொருள்கள்

அத்துணைப் பெருமிதம்

27. அது சரி !

து’ என்பது சுட்டுப் பெயர். சேய்மைச் சுட்டு எனப்படும். ‘இது’ அண்மைச் சுட்டு.

‘சரி’ என்னும் வருமொழியை நொக்கி ‘அது’ என்பதன்பின் வல்லெழுத்து மிகவில்லை.

அது, இது, அவை, இவை, அவ்வாறு, இவ்வாறு என்னும் சுட்டுப் பெயர்களின் பின் வல்லெழுத்து மிகாது.

எடுத்துக்காட்டு.:- 

அது தவறு

அவை பிழை

இன்று பேசேன்

இது பழச்சாறு

இவை தூவல்கள்

அன்று சொன்னார்


28. என்ன செய்தி ? 

ன்ன செய்தி ?’ என்பது ஒரு வினாப் பெயர். அது செய்தி என்னும் தொழிற் பெயரால் தொடரப்பட்டுள்ளது.

செய்தி என்னும் வருமொழியை நோக்கி என்ன என்னும் நிலைமொழியை அடுத்து வல்லெழுத்து மிகவில்லை.

எது, எவை, ஏது, யாவை, என்ன, என்று, எத்தனை, எவ்வளவு, என்னும் வினாப் பெயர்களின் முன்னும் ஆ, ஓ, ஏ என்னும் எழுத்துகளை இறுதியாகக் கொண்ட வினாப் பெயர்களின் முன்னும் வல்லெழுத்து மிகாது.

எடுத்துக்காட்டு :- 

எது கனிந்தது ?

எவ்வளவு கிட்டும் ?

எவ்வாறு தீர்ப்பது ?

என்று சென்றான் ?

காட்சியா பார்த்தான் ?

எவை சிறந்தன ?

ஏது காசு ?

யாது கூறினார் ?

வானொலியா கேட்டான் ?

கதையே கேட்டனை ?

29. யாண்டுச் சென்றாய் ?

யாண்டு என்பது ‘எங்கே’ என்று பொருள்படும் வினாப் பெயர்.

யாண்டு என்னும் வினாப் பெயர் சென்றாய் என்ற சொல்லைச் சேரும்போது இடையில் வல்லெழுத்து ( ச் ) வந்துள்ளது.

‘எ’ என்னும் வினா எழுத்தின் முன்னும், எந்த, எங்கு, யாண்டு, எத்தனை, எப்படி, எற்றை, எவ்வகை, யா என்னும் வினாப் பெயர்களின் முன்னும் வல்லெழுத்து மிகும்.

எடுத்துக்காட்டு :-

எப்பொருள் ?

எந்தச் சிலம்பு ?

எவ்வகைப் பள்ளி ?

எத்துணைத் துன்பம் ?

யாண்டுக் குடியிருப்பு ?

எப்படி[ பாடினரோ ?

எங்குத் தங்கலாம் ?

யாங்குக் கண்டாய் ?

எத்தனைத் தூவல் ?

யாப் பெரியன ?


30. தீப்பற்றியது 

தீ என்பது ஓர் எழுத்தாக இருந்தாலும் பொருள் தருகின்றமையால் அது சொல்லாகவும் அமைந்துள்ளது.

ஓர் எழுத்தே ஒரு சொல்லாக விளங்குவதால் இஃது ஓரெழுத்தொருமொழி  என்று வழங்கப்படுகிறது.

ஓரெழுத்தொருமொழியின்பின் வல்லெழுத்து மிகும்..

எடுத்துக்காட்டு :- 

ஈக்காடு

ஏச் சென்றது

காப் போல

ஆத் தின்றது

மாப் பூத்தது

சேக்கிழார்

நாப்பழக்கம்

கோச்சேரன்

பாப்புனைந்தார்

நாச்சுவை

31.கனாக் கண்டேன் 


னா’ என்பது ஈரெழுத் தொருமொழி. அதாவது இரண்டே எழுத்துக்களைக் கொண்ட ஒரு சொல்.

இரண்டே எழுத்துக்களிலும் முன்னெழுத்து குற்றெழுத்துத்தாகவும், ப்ன்னெழுத்து ஆகார நெடிலாகவும் உள்ளன.

கண்டேன் என்னும் வருமொழியை நோக்கிக் கனா என்னும் நிலைமொழியை அடுத்து வல்லெழுத்து மிகுந்துள்ளது.

குறிலைத் தொடர்ந்து ஆகார நெடில் வரும் ஈற்றெழுத்தொருமொழியின் பின் வல்லினம் வரும்.

எடுத்துக்காட்டு :- 

விழாக் கண்டார்

உலாப் போந்தார்

நிலாச் சோறு

பல்;ஆக் காய்த்தது

விலாப் புடைக்க

இராப் பகல்

வினாத் தொடுத்தார்

மிடாக்குடியன்

உசாத்துணை

பொறாப் பேசுமா ?


32. கொசுக் கடித்தது

கொசு என்பதில் இரண்டு எழுத்துக்களும், அவை இரண்டும் குறிலாகவும் இருக்கின்றன. ஆகவே, இது குறிலிணை மொழி எனப்படும்.

இக்குறிலிணை மொழியில் இறுதியெழுத்து ( பின்னெழுத்து _ ‘உகரம்’ ஏறிய மெய் எழுத்தாக உள்ளது.

தனிக்குற்றெழுத்தை அடுத்து உகர உயிர்மெய் எதுவரினும் அது முற்றியலுகரமே.

‘கொசு’ என்பதன்பின் கடித்தது என்னும் வருமொழி நோக்கி வல்லெழுத்து மிகுண்ட்துள்ளது.

குற்றிலிணை மொழிகளில் வரும் முற்றியலுகரத்தின் பின் வலி மிகும்.

எடுத்துக்காட்டு :- 

உடுச் சிதறியது

மடுத் தூர்ந்தது

வடுத் தீர்ந்தது

நடுத் தீர்ப்பு

வலுக் குன்றியது

கணுத் தோன்றியது

அணுப் பிளந்தது

கடுக் கண்டன்

உடுக் குறி

கருக் கொண்டாள்

நன்றி :

வல்லினம் மிகுதலும் மிகாமையும்

திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார்

இறையகம்

5 / 731 , நடுவண் புலனாய்வுத் துறைக்காவல் அலுவலர் குடியிருப்பு

( C.B.I. POLICE OFFICER"S COLONY )

மேடவாக்கம், சென்னை - 600 100

விலை : உரு.10/-

 ( இன்னும் வரும் )

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment